பொருளியல் - மனிதனுடன் பிறந்த கலை


மனிதர்களாகிய நாம், நம் வாழ்க்கை வசதிகளை பெருக்க, ஏராளமான சாதனங்களைப் பயன்படுத்தி வருகிறோம். குறிப்பாக, இன்றைய நவீன உலகில், மக்கள் பயன்பாட்டுக்காக லட்சோபலட்சம் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. மக்கள்தொகை பெருக்கத்துகேற்ப, பொருட்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எனினும், அவற்றை தயாரிக்கப் பயன்படும் உற்பத்தி ஆதாரங்களின் அளவு ஒரு எல்லைக்கு உட்பட்டதாகவே உள்ளது.
அதாவது, அளவற்ற தேவை, ஆனால் அளவான வளம் என்கிற நிலை. இதை, உற்பத்தி வளங்களின் அருமை அல்லது பற்றாக்குறை (Scarcity) என்கிறோம்.
இத்தகைய சூழலில், பற்றாக்குறையான வளங்களை, எப்படி முறையாகப் பயன்படுத்தி மனிதர்களின் தேவையை நிறைவேற்றுவது என்பதைப் பற்றி விரிவாக படிப்பதையே 'Economics' (பொருளியல்) என்கிறோம்.
Oikonomia (ஓய்க்கோனோமியா) எனும் கிரேக்க சொல்லிலிருந்து Economics (எக்கனாமிக்ஸ்) என்ற வார்த்தை பிறந்தது. இதற்கு, வீட்டு நிர்வாகம் என்று பொருள். அதாவது, குடும்பத்துக்கு அத்தியாவசியமான பொருட்களைச் சம்பாதிப்பது எப்படி?, அதை சிக்கனமாக செலவு செய்து எப்படி?, எதிர்கால தேவைக்காக சேமித்து வைப்பது எப்படி? என்பது போன்ற விஷயங்களை பற்றி பேசுவதை ஆரம்பத்தில் பொருளியல் (Economics) என்றார்கள்.  பிற்காலத்தில் (17ம் நூற்றாண்டில்), அருமைவாய்ந்த இயற்கை வள ஆதாரங்களை (Scarce Resources), ஒட்டுமொத்த தேசமும் எப்படி தம்முடைய தேவைக்காக திறம்பட பயன்படுத்துவது என்பதை பற்றி பேசுவதாக, பொருளியல் விரிவடைந்தது.
பொருளியல் என்பது மனிதனோடு பிறந்த கலை. அறிந்தோ அறியாமலோ, ஆதிகாலம் முதல் பொருள் பயன்பாட்டை சிறந்த முறையில் மனிதன்  கையாண்டு வருகிறான். இன்றைய காலத்தில், மக்கள்தொகை மற்றும் பொருட்களின் தேவை அதிகரித்துக்கொண்டே செல்லும் சூழலில், பொருளியல் குறித்து அறிவியல்பூர்வமான பார்வையை வளர்த்துக்கொள்வது மிக அவசியமாகிறது. பணவீக்கம் ஏன் ஏற்படுகிறது?, வேலையிழப்பு பிரச்னைக்கு என்ன காரணம்?, மக்களின் பொருளாதார நடவடிக்கையில் அரசு தலையிடலாமா? என்பன போன்ற, நம்மோடு தொடர்புடைய பல கேள்விகளுக்கும் பொருளியல் தெளிவான பதில் சொல்லும்.
“மனிதனின் எந்த ஒரு நடவடிக்கையின் முக்கிய நோக்கம் செல்வத்தைத் திரட்டுதலே. அந்தச் செல்வம் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது, எவ்வாறு செலவு செய்யப்படுகிறது என்பதை அறிவது மிகவும் அவசியமானது, ஆர்வமானது. நாடுகளின் செல்வத்தின் தன்மை, செல்வத்தை உருவாக்கும், பெருக்கும் காரணிகள் ஆகியவற்றைக் குறித்து விளக்கம் தரும் அறிவியலே பொருளியல்” - ஆடம் ஸ்மித், பொருளியல் அறிஞர்.
--* ரோஷன் செல்வரத்தினம்

Comments

Popular posts from this blog

அமைய செலவு

பங்குச் சந்தை சூதாட்டம்!

விலைவாசி உயர்வு ஏன்?