பற்றாக்குறை எனும் உந்துசக்தி!
மனிதர்களுக்கு ஏராளமான விருப்பங்கள் உள்ளன; ஆனால், அத்தகைய விருப்பங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் தேவையான அளவுக்கு பொருட்கள் இல்லாத நிலையையே பற்றாக்குறை (Scarcity) என்கிறோம். ஆனால், பற்றாக்குறைதான் பொருளாதாரம் இயங்குவதற்கு முக்கிய அடிப்படையாக இருக்கிறது. பற்றாக்குறையின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ள, உலகில் பற்றாக்குறை இல்லாத ஒரு சூழ்நிலையை கற்பனை செய்து பார்க்க வேண்டும்.
வங்கக்கடலில் தண்ணீருக்கு பதிலாக வற்றா பால் கடலும், நம் கைகளுக்கு எட்டும் தூரத்தில் காய்கறி காடுகளும், ஊட்டி பகுதி மலைகள் அளவுக்கு அரிசி, தங்க மற்றும் வெள்ளி மலைகளும் இருக்கின்றன என்றும் வைத்துக்கொள்வோம். இப்போது, நாம் எப்படி இருப்போம் என்று கற்பனை செய்து பாருங்கள். எல்லாருக்கும் உணவு பஞ்சமின்றி கிடைப்பதால், யாரும் விவசாயம் செய்யவே தேவை இருக்காது. அதன் காரணமாக, உணவு வர்த்தகம் இருக்காது, யாரும் யாரிடமும் வேலைக்கு போக வேண்டிய தேவை இருக்காது. சமூகத்தில் இதனால், உழைப்பு இருக்காது. கொடுக்கல் வாங்கல், போட்டி, பணம் என்று எதுவுமே இருக்காது. மொத்தத்தில், பொருளாதார நடவடிக்கை ஸ்தம்பித்து நிற்கிற சூழ்நிலை உருவாகும். பற்றாக்குறை இருக்கும்போது தான், மனிதர்கள் உழைக்க முன்வருவார்கள்.
எனவே, பொருளாதாரம் முறையாக இயங்க வேண்டும் என்றால், அங்கு பற்றாக்குறை அவசியம் என்பதை இதன்மூலம் புரிந்துகொள்ளலாம்.
ஏன் பற்றாக்குறை ஏற்படுகிறது?
அரிசி உற்பத்தி செய்ய வேண்டும் என்றால், அதற்கு விவசாயி வயலில் இறங்கி நாற்று நட்டு பயிர் வளர்த்து, நெல்லை மில்லில் கொண்டு போய் அரைத்து அரிசியை பெற வேண்டும். அதே, பால் வேண்டுமென்றால், கால்நடைகளை மேய்த்து பராமரிக்க வேண்டும். பழம் வேண்டும் என்றால், வேலி போட்டு தோட்டம் வைத்து தண்ணீர் ஊற்ற வேண்டும். கார் வேண்டும் என்றால், அதற்கான நூற்றுக்கணக்கான பாகங்களை தயாரித்து பொருத்த வேண்டும்.
இப்படியாக, பொருள் உற்பத்தி என்பது உழைக்கும் திறன் (மனிதர்கள், இயந்திரம்), நிலம், இயற்கை வளம் (மரம், தங்கம், வெள்ளி, இரும்பு, பித்தளை, பெட்ரோல் உள்ளிட்டவை ) போன்ற பல விஷயங்களை சார்ந்தே உள்ளது. ஆனால், இயற்கை வளம், உழைக்கும் திறன், தொழில்நுட்பம், நேரம் போன்றவை எல்லாம் எல்லைக்கு உட்பட்டது என்பதால், பொருட்களின் உற்பத்தியும் குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டதாகவே இருக்கும். அதாவது, மனிதர்களின் ஏராளமான தேவையை ஈடுகட்டும் அளவுக்கு பொருட்களின் உற்பத்தியை செய்ய முடியாது. இதுவே, பொருட்களின் பற்றாக்குறை க்கு(Scarcity) காரணம்.
பற்றாக்குறையின் ‘தெரிவு’ விளைவு
பற்றாக்குறையின் முக்கிய விளைவு, தெரிவு (Choice) ஆகும். அதாவது, மனிதனுக்கு ஏராளாமான தேவைகள் இருக்கின்றன. எனினும், அவனுடைய தேவைகளில் எதை நிறைவேற்றுவதால் அதிக நன்மை அல்லது மனநிறைவை தரும் என்று கருதுகிறானோ, அதை தெரிவு செய்ய பற்றாக்குறை அவனை நிர்பந்திக்கிறது. மனிதன் விவேகம் உள்ளவன் என்பதால், தனக்கு எது முக்கியம் என்பதை உணர்ந்தே, பொருட்களையும், சேவைகளையும் அவன் நாடுவான் என்பது மறுக்க முடியாத உண்மை.
தெரிவு என்பது என்ன?
உதாரணத்திற்கு, ஒருவர் கார் வாங்க வேண்டும் என்று 3 லட்சம் ரூபாய் சேர்த்து வைத்திருக்கார் என்று வைத்துக்கொள்வோம். அந்த நேரம் பார்த்து, அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு, நோய் ஏற்பட்டு 3 லட்சம் ரூபாய் செலவு செய்தால்தான் உயிர்காக்க முடியும் என்று நிலை ஏற்பட்டுவிடுகிறது. இப்போது, மேற்சொன்ன இரண்டு தேவைகளையும் அந்த நபர் நிறைவேற்ற வேண்டும் என்றும் விரும்பினாலும், அவரால் இரண்டில் ஒன்றை மட்டுமே செய்ய முடியும். இதற்கு, பற்றாக்குறையே (பொருளாதாரம்) காரணம்.
அதேபோல், மற்றொரு உதாரணம் சூப்பர் மார்க்கெட்டுக்கு செல்லும்போது, அங்கு நூற்றக்காணக்கான பொருட்கள் இருக்கும். ஆனால், சூப்பர் மார்க்கெட்டை நாம் வெளியில் வரும்போது, மிஞ்சிப்போனால் இரண்டு பைகள் மட்டும் பொருட்களை வாங்கி வருவோம். நூற்றுக்கணக்கான பொருட்களில் இரண்டு பைகளை வெளியில் கொண்டு வருவதற்கு காரணம், பற்றாக்குறை ஏற்படுத்தும் ‘தெரிவு’ விளைவுதான். ரோஷன் செல்வரத்தினம், பொருளியல் ஆய்வாளர்
Comments
Post a Comment