அமைய செலவு
நாம் எந்த ஒரு பொருளை பெற்றுக் கொள்ளும் போதும், அதற்கு பதிலாக இன்னொரு பொருளை தியாகம் செய்கிறோம். அந்த தியாகமே ‘அமையச் செலவு’அல்லது ‘வாய்ப்பு செலவு’ (Opportunity Cost) என்று அழைக்கப்படுகிறது. பொருளியலின் முக்கிய கருத்தான இது, வர்த்தக செயல்பாட்டு முடிவுகளில் பெரும் தாக்கத்தை செலுத்துவதாக உள்ளது.
உதாரணத்திற்கு, +2 முடித்த சரவணன், ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருடைய கல்வி செலவு எப்படி கணக்கிடுவீர்கள்? அவருடைய டியூசன் கட்டணம், விடுதி கட்டணம், உணவு செலவு, புத்தக செலவு உள்ளிட்டவற்றுக்கு ஆகும் செலவைக் கூட்டித்தானே?. ஆனால், உண்மையான செலவு அந்த பண செலவு மட்டும் அல்ல... பின்னர் என்ன அது?
இப்படி யோசித்து பாருங்கள்... சரவணன், +2 முடித்த பிறகு, அவனுக்கு முன் இரண்டு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று, கல்லூயில் சேர்ந்து படிக்க வேண்டும், இல்லாவிட்டால் எங்கேனும் வேலைக்கு செல்ல வேண்டும். கல்லூரியில் சேரவில்லை என்றால், அவன் ஏதேனும் ஒரு ஊதியத்துக்கு வேலை போயிருப்பான் தானே. இப்போது, சரவணுனுடைய வேலை மூலம், அவனுக்கு என்னென்ன கிடைக்கும் என்பதை பட்டியலிடுங்கள்? நான்கு வருட அனுபவம், சரவணனுடைய அனுபவத்துக்காக அவனுக்கு கிடைக்கும் பதவி உயர்வு, நான்கு வருட சம்பளம் உள்ளிட்டவற்றை பெற்றுக்கொள்வான். அப்படி பார்த்தால், அவனுடைய உழைப்பு கூலி, வேலை அனுபவம், நேரம் உளளிட்ட பலன்களை அடைகிற வாய்ப்பை தியாகம் செய்தே, அவன் பொறியியல் படிப்பை தேர்வு செய்தான். அவ்வாறு அவன் தியாகம் செய்த வாய்ப்பையே, வாய்ப்பு செலவு என்கிறோம்.
இன்னொரு எளிமையான உதாரணத்தையும் பார்க்கலாம். ரமேஷூக்கு ஒரு ஓய்வு நாள் கிடைக்கிறது. அன்று, நூறு ரூபாய் செலவு செய்து ரமேஷ் சினிமா பார்க்கிறான். இப்போது, அவனுடைய அமையச் செலவு என்பது, நூறு ரூபாய் இல்லை. சினிமாவுக்கு போகவில்லை என்றால், அந்த நேரத்தில் தன்னுடைய விடுபட்ட வீட்டுப்பாடங்களை முடிக்க ரமேஷ் திட்டமிட்டிருந்தான். எனவே, வீட்டுப்பாடங்களை செய்வதை விடுவதே ரமேஷூடைய வாய்ப்பு செலவாகும்.
முடிவெடுக்க உதவும் வாய்ப்பு செலவு
வாய்ப்பு செலவை அறிந்துகொள்வதின் மூலம் நம் எடுக்கும் முடிவு சிறந்ததா என்பதை, புரிந்துகொள்ள முடியும். அதற்கு முதலாவது உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். இப்போது, சரவணன் எப்படி முடிவெடுத்திருப்பான் என்பதை இலகுவாக யூகித்து விடலாம் தானே?
‘பொறியியல் படிப்பில், நன்றாக படித்து நல்ல மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்றால், தகுதிக்கேற்ற வேலையும், அதிக சம்பளமும் எனக்கு கிடைக்கும். நான் செய்த நான்கு வருட தியாகமும் வீண் போகாது. எனவே, உடனடியாக வேலைக்கு போய் அந்த பலன்கள் பெறுவதை விட, பொறியியல் படிப்பை படிப்பதிலேயே அதிக பலன் இருக்கிறது’ என்று சரவணன் கருதியதால், தனக்கு முன் இருந்த இரண்டு வாய்ப்புகளில், ஒன்றை தியாகம் செய்து, மற்றொன்றை தேர்வு செய்தான்.
சுருக்கமாக சென்னால், ஒரு பொருள் தேர்வின் வாய்ப்புச் செலவானது, அதற்கடுத்த சிறந்த வாய்ப்பை விடுதல் அல்லது தியாகம் செய்தல் என்பதாகும். நம்முடைய பொருள் தேர்வோடு, அதற்காக செய்யப்படும் தியாகத்தை (வாய்ப்பு செலவை) ஒப்பிடுவதன்மூலம், நம் முடிவு சரியானதுதானா என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.
பயிற்சி : உடைகள், உணவுப்பொருட்கள், புத்தகங்கள், பொம்மைகள் என்று ஏராளமானவற்றுக்காக செலவுகள் செய்கிறோம். இவற்றில் சிலவற்றை எடுத்துக்கொண்டு, அதற்குண்டான வாய்ப்பு செலவை கணக்கிடவும்.
••••••••••••••••••••••••••••••••
அருமையான பதிவு
ReplyDeleteசிறப்பு
ReplyDelete