பொதுத்துறையின் பொறுப்புடைமை
சமீபகாலம்வரை பொதுத்துறையின் பொறுப்புடைமையை மீட்டெடுத்தல் குறித்துப் பேச யாருமே இல்லை. இடதுசாரி அரசியல்வாதிகள், இந்தப் பிரச்னையை ஏற்றுக்கொள்ளவே விரும்புவதில்லை. இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பொருத்தமட்டில் அரசு ஊழியர்கள்தாம் அவர்களுடைய பெரும்பான்மைத் தொகுதியினர். அரசு ஊழியர்கள் மக்கள் நலனுக்கு எதிரானவர்களாக இருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே கம்யூனிஸ்ட் கட்சிகள் மறுக்கின்றன. வலதுசாரி அரசியல்வாதிகளைப் பொருத்தமட்டில் பொதுத் துறை என்பதே ஒழித்துக்கட்டப்படவேண்டிய ஒன்று. எனவே கொஞ்சம் திறனின்மை, அதிகம் திறனின்மை என்று பிரித்துப் பேசுவதை அவர்கள் விரும்புவதில்லை. வலதுசாரிகளின் நோக்கம் பொதுத்துறையை முன்னேற்றுவது அல்ல; மாறாக அவற்றை ஒழித்துக்கட்டித் தனியார்மயமாக்குவது. இந்தக் காரணங்களால் விநோதமாக, பொதுத்துறையின் பொறுப்புடைமையைக் கண்டுகொள்ளாத வலது-இடது கூட்டணி ஒன்று உருவாகியுள்ளது.
- ழான் ட்ரீஸ், அமர்த்ய சென், An Uncertain Glory.ட்ரீஸ், சென் புத்தகத்தில் பல சுவாரசியமான கருத்துகள் உள்ளன. நிறையப் புலம்பலும் உள்ளது. (பிசினஸ் ஸ்டாண்டர்ட் புத்தக விமரிசனத்தில் இந்தப் புத்தகமே ஒரு வேஸ்ட் என்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அது நியாயமற்ற கருத்து.) நாட்டின் வளர்ச்சியில் ஆர்வம் உள்ளவர்கள் இந்தப் புத்தகத்தைக் கட்டாயம் படிக்கவேண்டும். உங்களுக்கு சென்னிடம் மாற்றுக்கருத்து இருந்தாலும்கூட.
மேலே சொல்லப்பட்ட கருத்தை எடுத்துக்கொள்வோம். பொதுத்துறை ஊழல் நிரம்பியதாக இருக்கிறது. இங்கு பொதுத்துறை என்று ட்ரீஸ், சென் சொல்வது அரசு அலுவலகங்கள், பொதுத்துறை கம்பெனிகள் என இரண்டையும் சேர்த்து. அதாவது பொருள்கள் வாங்கும் ரேஷன் கடை, ஓட்டுனர் உரிமம் வாங்கும் ஆர்.டி.ஓ ஆபீஸ், நிலம் பதிவு செய்யும் ரிஜிஸ்திரார் ஆபீஸ், கரண்ட் பில் கட்டும் மின்சார வாரியம், போஸ்ட் ஆபீஸ், பி.எஸ்.என்.எல், சாதிச் சான்றிதழ் வாங்கும் அலுவலகம், பென்ஷன் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் - இப்படி எல்லாமே.
இங்கு பொதுமக்கள் ஒரு குறிப்பிட்ட சேவையை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த நேரத்துக்குள் அது நடப்பதில்லை. அவர்கள் எதிர்பார்க்கும் தரத்தில் சேவைகளும் பொருள்களும் கிடைப்பதில்லை. ஏச்சு பேச்சுகளைக் கேட்கவேண்டியிருக்கிறது. இன்று போய் நாளை வா என்று துரத்தப்படுகிறார்கள். லஞ்சம் எதிர்பார்க்கப்படுகிறது. கொடுப்பவர்களுக்குக் காரியம் சுளுவாக நடைபெறுகிறது. கொடுக்காதவர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.
எதற்கெடுத்தாலும் கருத்து சொல்லும் இடதுசாரிகள், அவர்களுடைய முக்கியத் தொகுதியான அரசு ஊழியர்களின் படுமோசமான நடத்தை பற்றி மட்டும் பேசுவதே இல்லை. போராடிப் போராடி ஃபைனான்ஸ் கமிஷன் பரிந்துரைப்படி ஊதிய உயர்வு, போனஸ், விடுமுறைச் சலுகை என்று எல்லாம் வாங்கிக்கொடுக்கிறார்கள். ஆனால் அரசு ஊழியர்கள் வாங்குகிற காசுக்கு வஞ்சகமில்லாமல் உழைக்கிறார்களா என்று பார்ப்பதில்லை; குறைந்தபட்சம் அப்படி உழைக்கவேண்டும் என்று குரல் கொடுப்பதுகூட இல்லை.
பொதுத்துறை ஆசிரியர்கள் ஒழுங்காக வேலை செய்தால் மாணவர்கள் ஏன் தனியார் பள்ளிகளுக்குப் போகிறார்கள்? பொதுத்துறை மருத்துவமனைகளில் உள்ள ஊழியர்கள் எல்லாம் பணிவுடனும் கனிவுடனும் பண்புடனும் நடந்துகொண்டால் யார் தனியார் மருத்துவமனைக்குப் போகப்போகிறார்கள்? அரசு அலுவலகங்களில் ஏன் எரிந்து விழுகிறார்கள்? ஏன் சில அசிங்க நிழல் ஆசாமிகள், ‘இங்க வாங்க சார், நான் முடிச்சுத் தரேன்’ என்று டீல் போட அனுமதிக்கப்படுகிறார்கள்?
இதைப் பற்றி ஒரு மதிய உணவின்போது பேசிக்கொண்டிருக்கையில் தோழர் மருதன், ‘எல்லாத் தொழிலாளர்/ஊழியர் சங்கங்களும் கம்யூனிஸ்ட் கட்சி சங்கங்கள் கிடையாது; பல சங்கங்கள் பிற கட்சிகளுடையவை’ என்றார். எனவே கம்யூனிஸ்ட் கட்சிகளை மட்டும் குறை சொல்லக்கூடாது என்றார். நியாயமான கருத்து. ஆனாலும் தனியார்மயத்தைக் கடுமையாக எதிர்க்கும் தோழர்கள், ஏன் வலதுசாரிகள் தனியார்மயத்தை ஆதரிக்கிறார்கள் என்பதை ஆராய்ந்து, அதனைத் தணிக்க அரசு ஊழியத் தோழர்களை ஒழுங்காக உழைக்குமாறு கேட்டுக்கொள்வதில்லை? என் இதற்கென ஒரு பிரசாரத்தை ஆரம்பித்துத் தங்கள் செயல்பாட்டை முன்னெடுப்பதில்லை?
வலதுசாரிகளைப் பொருத்தமட்டில், அரசு ஊழியர்கள் எக்காலத்திலும் பணிவான, கனிவான சேவையைத் தர மாட்டார்கள் என்பதே கருத்து. (அதுதான் என் கருத்தும்கூட.) ஏனெனில் நியாயமாக நடந்துகொள்ளவேண்டிய உந்துதல் அவர்களுக்கு இல்லை. அவர்களை ஒழுங்காகக் கண்காணித்து நியாயமாக நடந்துகொள்ளும்படி வலியுறுத்தும் விருப்பம் ஆட்சிப் பதவியில் இருப்போருக்கு இல்லை. தவறுபவர்களைத் தண்டிக்கும் போக்கு கொஞ்சம்கூட இல்லை. தவறு செய்பவர்களைத் தட்டிக் கேட்கும் திராணி அரசிடம் இல்லாததற்குக் காரணம் தொழிற்சங்கங்களின் வலு. அதே நேரம், அரசியல் ஆதாயங்களுக்காக துர்கா சக்தி நாக்பால் போன்ற நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைத் தூக்கிப் பந்தாட இந்த அரசியல்வாதிகள் தயங்குவதில்லை.
எனவே முடிந்தவரை மிகக் குறைந்த செயல்பாடுகள் மட்டுமே அரசிடம் இருக்கவேண்டும் என்கிறார்கள் வலதுசாரிகள்.
தனியார் மட்டும் என்ன ஒழுங்கா என்ற கேள்விக்கு என்ன பதில்? சட்டங்கள் வலுவாக இருக்கும்பட்சத்தில், கட்டுப்பாட்டு அமைப்புகள் ஒழுங்காக இருக்கும்பட்சத்தில் தனியாரைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். சந்தைப் போட்டியே நிறுவனம்-வாடிக்கையாளர் உறவில் ஒழுங்கான பண்பைப் பெருமளவு கொண்டுவந்திருக்கிறது. ஆனால் பொதுத்துறை ஊழியர்கள், தாம் வாங்கும் சம்பளத்துக்கு நியாயமாக, நேர்மையாக, பொதுமக்களை ஏமாற்றாமல், விரைவாக, செயலூக்கத்துடன் செயல் புரிவார்கள் என்பதைத்தான் நம்ப முடியவில்லை.
ட்ரீஸும் சென்னும் பொதுத்துறையினர் சரியான அழுத்தம் கொடுத்தால் நியாயமாகப் பணி புரிவார்கள் என்று நம்புகிறார்கள். அதை நம்புவதற்குத் தேவையான சான்றுகளை அவர்கள் புத்தகத்தில் காட்டுவதில்லை. ஆம் ஆத்மி கட்சி, லோக்பாலுக்கான போராட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்ற சிலவற்றைக் காரணம் காட்டுகிறார்கள். ஆனால் அவையெல்லாம் நம்பும்படியாக இல்லை.
கம்யூனிஸ்ட் தோழர்கள் கொஞ்சம் இந்தத் துறையில் கவனம் செலுத்தி பொதுத்துறையில் ஊழலை ஒழித்து செயல்திறனை ஊக்கப்படுத்தினால், நான் என் கருத்தைச் சற்றே மாற்றிக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.
Comments
Post a Comment