பணவீக்கத்துக்கு மருந்து
இராம. சீனுவாசன்
"அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தும் நஞ்சு''. அப்படித்தான் பணமும்.
ஒரு நாட்டில் ஓரளவுக்கு பணவீக்கம் இருந்தால் மட்டுமே உற்பத்தியாளர்களின் லாபம் உயர்ந்து பொருள்கள் உற்பத்தியும் பெருகும். பணவீக்கம் கட்டுங்கடங்காமல் உயரும்போது, பணத்தின் மதிப்பு குறைந்து பொருளாதார உற்பத்தியும் பாதிப்படைகிறது. எனவே, அதிக பணவீக்கம் பொருளாதார வளர்ச்சிக்கு எதிரானது என்பது அடிப்படை பொருளாதாரக் கோட்பாடு ஆகும்.
இந்த நிதியாண்டின் தொடக்கத்தில் ஏப்ரல் 2007-ல் ரிசர்வ் வங்கி, நாட்டின் பணவீக்கம் 2007 - 08ல் 5 சதவீதம் முதல் 5.5 சதவீதமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை வெளியிட்டது. இதற்கு ஏதுவாக பண அளிப்பின் அளவு 15 சதவீதமாக இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டது. இதற்கு மாறாக டிசம்பர் 2006 முதல் பணவீக்கம் 5.5 சதவீதத்தைத் தாண்டி உயர்ந்து கொண்டே இருந்தது. தற்போது இது 6.73 சதவீதம் என்ற அளவை பிப்ரவரி 3, 2007 அன்று எட்டியது. உயர்ந்து வரும் பணவீக்கம் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளது.
பணவீக்கம் என்பது நாட்டின் பொது விலை மட்டம் உயரும் விகிதம். இது நாட்டில் எல்லாப் பொருள்களின் விலைகளும் சராசரியாக எவ்வளவு சதவீதம் உயர்ந்திருக்கிறது என்பதைக் குறிப்பிடுகிறது.
இந்தியாவில் பணவீக்கம் ஒவ்வொரு வாரமும் கணக்கிடப்பட்டு, முந்தைய ஆண்டில் அதே வாரத்தில் நிலவிய பணவீக்கத்தோடு ஒப்பிடப்படுகிறது.
பணவீக்கத்தின் காரணம் மக்களிடம் உள்ள அதிக பண இருப்பினால், அவர்களின் தேவையும் உயர்ந்து விலைவாசி உயர்வையும் தூண்டுகிறது என்றும், மக்களின் தேவைக்கேற்ப உற்பத்தி பெருகாமல் இருப்பது பணவீக்கத்தின் காரணம் என்று இரு வேறு காரணங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.
அதிக அளவு பண அளிப்பும், தேவையை விட குறைவான உற்பத்தி அளவும் ஆகிய இரண்டு காரணங்களும் பணவீக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை ஒப்புக்கொள்வதுபோல ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
"ரெப்போ' என்பது, வங்கிகள் போதிய பணம் இல்லாதபோது, தங்களிடம் உள்ள கடன் பத்திரங்களை வைத்து ஒரு சில நாள்களுக்குக் கடன் தொகை பெறுவதற்கு ஏற்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தமாகும். இதற்காக ரிசர்வ் வங்கி வசூலிக்கும் வட்டி விகிதம் "ரெப்போ ரேட்' என்று குறிப்பிடப்படும்.
""ரெப்போ ரேட்'' உயரும்போது, வங்கிகள் தாங்கள் கடன் பெறுவதைக் குறைத்து, கடன் கொடுப்பதையும் குறைக்கும். மேலும் வங்கிகள் கொடுக்கும் கடன் மீதான வட்டி வீதம் "ரெப்போ ரேட்டை'விட அதிகமாக இருக்கும்.
"ரிவர்ஸ் ரெப்போ' என்பது, வங்கிகள் அளவுக்கு அதிகமான பணத்தை, ரிசர்வ் வங்கியிடம் ஒரு சில நாள்களுக்கு வைப்புத் தொகையாகக் கொடுத்து அதற்கான வட்டியைப் பெறும் ஒப்பந்தமாகும். இதற்காக ரிசர்வ் வங்கி வழங்கும் வட்டி வீதத்துக்குக் குறைவான வட்டியில் வங்கிகள் மற்றவர்களுக்குக் கடன் கொடுப்பதில்லை.
பண இருப்பு விகிதம்: வங்கி பெறும் வைப்புத் தொகையின் ஒரு பகுதி பணமாக ரிசர்வ் வங்கியில் வைக்கப்பட வேண்டும். பண இருப்பு விகித அளவை அதிகப்படுத்தும்போது, வங்கியினால் கொடுக்கப்படும் கடன் அளவு குறைந்து பண அளிப்பும் குறையும்.
பணவீக்கத்தைக் குறைக்க "ரெப்போ ரேட்' பண இருப்பு விகிதம் ஆகியவற்றை ரிசர்வ் வங்கி உயர்த்தியது. மேலும் வங்கிகள் குறிப்பிட்ட சில நடவடிக்கைகளுக்குக் கடன் கொடுப்பதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு புதிய கட்டளைகளையும் பிறப்பித்தது. இதற்கு அவர்கள் கூறும் முக்கியக் காரணம், இந்த ஆண்டு தொடக்கம் வரை நாட்டின் மொத்த பண அளிப்பு எதிர்பார்த்த 15 சதவீதத்தைக் கடந்து 20 சதவீதம் என்ற நிலையை எட்டியுள்ளது. அதேபோல் வங்கிகள் கொடுக்கும் கடன் அளவும் 31 சதவீதம் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது.
எனவே ரிசர்வ் வங்கியின் பார்வையில் பொருளாதாரத்தில் பண அளிப்பு உயர்ந்தது பண வீக்கத்துக்கான மிக முக்கியக் காரணம் என்ற கருத்தை உருவாக்கியுள்ளது. ரிசர்வ் வங்கி எடுத்து வந்துள்ள இந்த நடவடிக்கைகள் பொருளாதாரத்தில் உண்மை வட்டி விகிதத்தை உயர்த்தும். இதன்மூலம் மக்கள் கடன் பெறும் அளவும் குறைந்து மொத்த பண அளிப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி எடுத்து வரும் நடவடிக்கைகள் உடனடியாக பண அளிப்பைக் குறைக்காது என்று ஒருசில பொருளாதார நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
அதேநேரத்தில் வேறு பலர் தற்போது நிலவி வரும் பணவீக்கத்துக்கு அதிக அளவில் பண அளிப்பு மட்டுமே காரணம் அல்ல, அதைவிட மிக முக்கியமான காரணம் போதுமான அளவிற்கு உற்பத்தி உயராமல் இருப்பதும் காரணம் என்று சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, பொருளாதாரத்தில் வட்டி விகிதத்தை உயர்த்துவதன் மூலம், உற்பத்தித் திறனை மேலும் குறைப்பதற்கான வழிவகைகளை ரிசர்வ் வங்கி ஏற்படுத்தியுள்ளது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
பணவீக்கத்தின் மிக முக்கியக் காரணம் பொருளாதாரத்தில் தேவைக்கேற்ப பொருள்களின் உற்பத்தி அளவு இல்லை என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக விவசாயப் பொருள்களின் விலைகள் மிக வேகமாக அதிகரித்து வருவது, பொருளாதாரத்தில் தேவைக்கேற்ப பொருள்களின் அளிப்பு உயர்வதில் உள்ள சிக்கல்களை எடுத்துக்காட்டுகின்றது என்பது ஒருசாராரின் கருத்து.
இதை ஒப்புக்கொள்வதுபோல, உணவுப் பொருள்களின் ஏற்றுமதியை நிறுத்துவது, இறக்குமதியை ஊக்கப்படுத்துவது, உணவுப் பொருள்கள் ஊக வாணிபங்களை நிறுத்துவது, எல்லா பொருள்களின் உற்பத்திக்கு அடிப்படையாக உள்ள பெட்ரோல், டீசல் விலைகளைக் குறைப்பது, சிமெண்ட், அலுமினியம் மீதுள்ள சுங்கத் தீர்வைகளைக் குறைப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் எல்லாம் எதிர்பார்க்கும் விளைவை ஏற்படுத்துமா என்பது சந்தேகமே. ஏனெனில் பொருள் உற்பத்தி மற்றும் அளிப்பினை மிகக் குறுகிய காலத்தில் குறிப்பாக விவசாயப் பொருள்களின் அளவை உயர்த்த முடியாது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. எனவே, பணவீக்கத்தைக் குறைப்பது ஒரு மிக நீண்ட கால முயற்சியாக இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.
நாட்டில் புதிய பொருளாதாரக் கொள்கை 1991 முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. பொருளாதாரத்தைச் சீரமைக்கும் நோக்கத்தோடு பல கொள்கை முடிவுகள், குறிப்பாக வரி, தொழில் துறை மற்றும் வியாபாரம் தொடர்பான கொள்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான பொருளாதாரச் சீரமைப்பில் விவசாயத் துறை பங்கெடுக்கவில்லை என்பதே பலரின் குற்றச்சாட்டாகும்.
எனவே, வருகின்ற காலங்களில் விவசாயத் துறையை சீரமைத்து விவசாயப் பொருள்களின் உற்பத்தியைப் பெருக்குவதன் மூலமே, நீண்ட கால நோக்கில் பணவீக்கத்தின் தாக்கத்தைக் குறைக்க முடியும் என்று பொருளியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
பொருள்களின் தேவைக்கேற்ப உள்நாட்டில் உற்பத்தியை உயர்த்தவும், அதேநேரத்தில் இறக்குமதியை உயர்த்தி மொத்த அளிப்பினை அதிகரிக்கும் நோக்கத்தோடும் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
உள்நாட்டில் பொருள் உற்பத்தி அதிகரிக்க வேண்டுமெனில், முதலீடுகள் உயர வேண்டும். இதற்கு வட்டி விகிதம் குறைவாக இருத்தல் வேண்டும். ஆனால் ரிசர்வ் வங்கி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு, வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. இது வருகின்ற காலங்களில் புதிய முதலீடுகளை ஏற்படுத்துவதற்குத் தடையாக இருக்கும்.
ரிசர்வ் வங்கி பண அளிப்பினைக் குறைக்க வேண்டுமெனில், மற்ற நாடுகளின் செலாவணியுடன் ஒப்பிடும்போது இந்திய ரூபாயின் மதிப்பு உயர வேண்டும். இதனால் இந்தியாவில் அந்நிய நாட்டுப் பொருள்களின் விலை குறைந்து, இறக்குமதி உயரும். இதனால், ரிசர்வ் வங்கியினுடைய பண அளிப்பும் குறையும். இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் உண்மை வட்டி விகிதம் குறைந்து, முதலீடுகள் உயர்ந்து, பொருள்கள் உற்பத்தி அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.
எனவே பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு, பொருள் உற்பத்தியை உயர்த்துவது மட்டுமே சிறந்த வழிமுறையாக இருக்கும்.
(கட்டுரையாளர்: முழு நேர உறுப்பினர், மாநிலத் திட்டக் குழு, தமிழ்நாடு
Comments
Post a Comment